Saturday, October 22, 2011

அமெரிக்காவிலும் தீபாவளி திருநாள்



"தல" தீபாவளி பட்சணங்கள்:

திருமணம் முடிந்து அமெரிக்கா வந்த பின், அம்மா வீட்டில் கொண்டாட முடியாமல் வரும் தல தீபாவளியை மறப்பது பலருக்கு கடினமான வேலைதான்.

புது உடைகள் தயாராக இருக்கும். ஏதோ ஒரு தமிழ் சங்கமோ இந்திய சங்கமோ கலை நிகழ்ச்சிகளை வாரி வழங்கி கொண்டு இருக்கும். குறிப்பாக, குழந்தை செல்வம் பெற்றவர்க்கு தீபாவளி நேரம் கோலாகலம் தான். குழந்தைகள் கலை நிகழ்ச்சிகளில் கலக்கிக் கொண்டு இருப்பார்கள். ஆனால், புதிதாய் திருமணம் ஆனவர்களுக்கு, ஊரு நினைப்பும், உறவினர்களின் பிரிவும் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்.

திருமணம் ஆகி அமெரிக்கா வந்த புதிதில், எனக்கு அமைந்த முதல் நட்பு வட்டம் - ஆந்திராவில் இருந்து வந்த புஷ்பா ; பெங்காலி பெண், மௌஷ்மி என்று சிறியதாக இருந்தது. மூவரும் முதல் தீபாவளி கொண்டாட தயார் ஆகி கொண்டு இருந்த நேரம். ஊர் நினைவுகள் மனதில் பாரமாக அழுத்த ஒரு உற்சாகம் இல்லாமல் இருந்தோம். புஷ்பா ஒரு நாள், எங்களை அழைத்து, " முதல் தீபாவளிக்கு என்று ஸ்பெஷல் ஆக ஏதாவது செய்வோம். இப்படியே புலம்பி கொண்டு இருப்பதற்கு பதிலாக , நாமே பலகாரங்கள் எல்லாம் சேர்ந்து செய்தால் என்ன? நிச்சயமாக தீபாவளி களைகட்டிவிடும்," என்று பட்டாசாய் ஆங்கிலத்தில் படபடத்தாள்.

அந்த நேரம், எங்கள் மூவரில் புஷ்பாதான் கொஞ்சமாவது சமைக்கத் தெரிந்தவள். நான், "cooking" என்று ஆங்கிலத்தில் spelling தெரிந்தாலே போதும், அமெரிக்காவில் சமாளித்து விடலாம் என்ற நினைப்பில் திருமணம் ஆனவள். மௌஷ்மியோ எனக்கும் ஒரு படி மேல். living room (வரவேற்பு அறை) க்கும் கிச்சனுக்கும் (அடுக்களைக்கும்) வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரிந்தாலே போதும் என்று திருமணம் செய்து கொண்டவள்.

அப்பொழுதெல்லாம் , தமிழ்நாட்டு சமையலில் LKG பாடமான சாம்பார் வைப்பதற்கே - துவரம் பருப்பா? கடலை பருப்பா? என்று வித்தியாசம் தெரியாமல் "மோசம்பார்" வைத்து கொண்டு இருந்தேன். (இப்போ ஜூப்பரா சமைப்போம்ல..... நீங்க நம்பித்தான் ஆகணும். இல்லை என்றால், நீங்கள் கொளுத்தும் பட்டாசு வெடிக்காமல் போக .....!!!)


மௌஷ்மி வீட்டுக்கு ஒரு நாள் செல்ல வேண்டியது வந்தது. புஷ்பாவிடம் கேட்டு தோசை செய்யப் பழகி விட்டதாக சொல்லி, என்னை அழைத்து இருந்தாள். அவளது சமையல் லேப் (lab)  நான் வெள்ளெலி. அடை, ஊத்தப்பம், சப்பாத்தி சேர்ந்த 3-in-1 ஐட்டம் ஒன்று முதலில் வந்தது. அதுதான் தோசையாம். தொட்டுக் கொள்ள பருப்பு ரசம் வந்தது. "சாம்பார் வைக்கவில்லையா?" என்றேன். "அதுதானே இது!" என்று அந்த ரசத்தை கை காட்டினாள். கரகாட்டக்காரன் வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வந்தது.

"எனக்கு காலணிகள் இல்லையே என்று கவலைப்பட்டேன். கால் இல்லாதாவனை காணும் வரை" என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? நானோ, "எனக்கு சமைக்கத் தெரியவில்லை என்று கவலைப்பட்டேன். மௌஷ்மியை காணும் வரை."

இப்படி இரண்டு கில்லாடி அடியாட்களை வைத்து கொண்டு, கிச்சனில்  சமையல் அடாவடிக்கு தயார் ஆகி விட்ட புஷ்பாவை இப்பொழுது நினைத்தாலும் பரிதாபமாக இருக்கிறது.

"This Friday morning, come to my place. I asked my mom how to make " sweet laddus". Lets try it." மீண்டும் புஷ்பாவின் நுனி நாக்கு ஆங்கில அழைப்பு.

மௌஷ்மியும் நானும், "நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்.....நாங்களும் தீபாவளி பலகாரம் பண்றோம்....... நாங்களும் சமையல் ரவுடிகள் தான்" என்று அவள் வீட்டுக்கு சென்றோம். புஷ்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் எங்கள் சமையல் குறிப்பு புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். அணுகுண்டு ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு கூட இப்படி நுணுக்கமாக குறிப்பெடுக்கும் இரண்டு assistants கிடைத்து இருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடலை மாவை பக்குவமாக கலந்து வைத்தாள். சீனிபாகை தயார் செய்தாள். கண்ணு கரண்டியை எடுத்து பூந்திக்கு தயார் ஆனபோது, மௌஷ்மி ஒரு சந்தேகம் கேட்டாளே பார்க்கலாம். "புஷ்பா, எல்லாம் சரி. இந்த கடலை மாவில் எப்பொழுதுதான் lettuce சேர்க்கப் போறே?"

(லெட்டூஸ் என்றல் என்ன என்று தெரியாதவர்களுக்கு: முட்டைக்கோஸ்க்கு தங்கையாம் - - - சாலட்ல போட்டு அப்படியே சாப்பிடுற இலை தழை - - - ஆட்டுக்கும் நமக்கும் வித்தியாசம் காட்ட விடாத ஒரு ஐட்டம். இப்போ புரிஞ்சுதா? )

"lettuce???" புஷ்பா அதிர்ந்தாள்.
"நீதானே ..... ஸ்வீட் lettuce செய்யப்போவதாக சொல்லி போன் பண்ணியே," மௌஷ்மி வெள்ளந்தியாக ஆக பதிலளித்தாள்.
புஷ்பா, ஸ்வீட் laddus என்று ஸ்டைல் ஆக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சொன்னது, மௌஷ்மிக்கு போனில் ஸ்வீட் lettuce என்று கேட்டு இருக்கிறது. ஆந்திராவில் அப்படி ஒரு தீபாவளி ஸ்வீட் ரொம்ப பாப்புலர் போல என்று நினைத்து வந்து இருக்கிறாள். அவள் விஷயத்தை சொல்லவும், நானும் புஷ்பாவும் புரையேறி கொள்ளும் அளவுக்கு சிரித்தோம்.

அந்த சந்தோஷ சிரிப்பினாலோ என்னவோ, அன்னைக்கு லட்டுக்களில் இனிப்பு அதிகமாகி இருந்தது.

நான், முதலில் உளுந்து வடை செய்தபோது, உளுந்து போண்டாவாக வந்து கொண்டு இருந்தது. பின், உளுந்து அமீபாவாக shape மாறியது. நண்பர்கள் கையில் இருப்பது உளுந்து வடைதான் என்று நான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டி இருந்தது.

இன்றோ, நண்பர்களுக்கு தட்டில் கொடுக்கும் போதே, உளுந்து வடைதான் என்று அவர்கள் அடையாளம் கண்டு கொண்டு, அதை சாப்பிட்ட பின்னும் உளுந்து வடைதான் என்று ஒத்துக்கொள்ளும் அளவுக்கு என் சமையலில் நல்ல முன்னேற்றம்.

இந்த தீபாவளி நேரத்தில், சமையல் ஆர்வ கோளாறு கொண்ட புது மனைவியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் - உள்ளே தள்ளியதை வெளியே துப்பவும் முடியாமல் - திருதிரு விழிகளுடன் வரும் புதிதாய் திருமணம் ஆன நண்பர்களுக்கு மறக்காமல் இனிய "தல(விதி) தீபாவளி வாழ்த்துக்கள்" சொல்ல மறக்காதீங்க. காரணம், முதல் தீபாவளி உள்ளவரை, சமையல் அலம்பல்கள் அமெரிக்காவில் தொடர்ந்து கொண்டே இருக்கும்......



மற்ற அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

படங்கள்: நன்றி கூகிள்வதி . ( இல்லை, ஒபாமாவுக்கு அந்த லட்டுக்கள்ள ரெண்டு புஷ்பா கொடுக்கப் போனப்போ எடுத்ததுன்னு ரீல் பட்டாசு கொளுத்தி போடவா?)


(பின் குறிப்பு: அமெரிக்காவில் உள்ள Connecticut தமிழ் சங்க தமிழ் இதழ் "பொன்னி" தீபாவளி மலர் வந்துள்ள en கட்டுரை. )