Thursday, August 26, 2010

பாப் கார்ன்

நான் சமையல் குறிப்பே எழுதுவது இல்லை, என்று சில பதிவர்கள் குறைப் பட்டுக்கொண்டார்கள்.  (தொழில் தர்மம் கருதி, பெயர்கள் தரப்படவில்லை.......  யம்மா, என்னா பில்ட்-அப்பு!)  அப்படி நான் எழுதாததால்,  என் சமையல் படு கேவலமாக இருக்கும் போல என்று நினைப்பில் எனக்கு கமென்ட் வேறு முந்தைய பதிவுகளில் போட்டு உள்ளார்கள்.  அவ்வ்வ்வ்.....
இல்லைப்பா..... நான் நல்லாவே சமைப்பேன்..... (உண்மை.... உண்மை..... உண்மையை தவிர வேறு எதுவும் இல்லை.) Fancy யாதான் எதுவும் சமைக்கத் தெரியாது.  தென் தமிழ்நாட்டுப் பக்கம் உள்ள சமையலில் அசத்துவது போல மற்ற வகை சமையலில் பிரமாதப்படுத்த தெரியாது.  அவ்வளவுதான்...

மேலும்,  பதிவுலகில்  போட்டியே வைத்து களைகட்டும் அளவுக்கு சமையல் ராணிகள் கலக்குறாங்க......

இருந்தாலும்,  வித்தியாசமான இந்த ரெசிபி, எனக்கு கிடைத்ததும் என்னால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.   "எந்திரன்" ஸ்பெஷல் என்றும் வைத்து கொள்ளுங்களேன்.....  இந்த ஸ்பெஷல் பாப்கார்ன் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
இனிமே யாரும் என்னை சமையல் குறிப்பு எதற்கு எழுத மாட்டேங்கறீங்க என்று சொல்லக்கூடாத அளவுக்கு இந்த ரெசிபி பண்ணிடும் என்று நினைக்கிறேன்.  

தேவையான பொருட்கள்:

 ஒரு சின்ன மர டேபிள் அல்லது ஸ்டூல்
ஐந்தில் இருந்து பத்து செல் போன்கள்
(டிப்ஸ்)  அந்த செல் போன்களின் நம்பர்கள் தெரிந்து இருப்பது நல்லது.
ஐந்து அல்லது ஆறு - நன்கு காய்ந்த சோளம் (பாப்கார்ன் செய்வதற்கு ஏற்ற முறையில்)

ஸ்டார்ட் த மூஜிக்:

மர டேபிள் எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
மூன்று அல்லது நான்கு செல் போன்கள் எடுத்து அரணாக நடுவில் சுற்றி வைக்கவும்.
செல் போன்கள் மத்தியில் உருவாகும் வட்டத்தில் (இடத்தில்)  பாப் செய்ய வேண்டிய கார்ன் எடுத்து வைக்கவும்.
கையில் இருக்கும் மற்ற செல்போன்கள் உதவியுடன்,  டேபிள் மேல் இருக்கும் செல் போன்களுக்கு டயல் செய்யவும்.
ரிங் சத்தம் கேட்கட்டும்.  missed கால் ஆக போகட்டும். எடுத்து பதில் பேச வேண்டாம்.
பட் பட் என்று பாப்கார்ன் வெடித்து ரெடி ஆகிவிடும்.
எடுத்து சாப்பிட்டு விடவேண்டியதுதான்.

என்ன ஒரு மாதிரியாக என்னை பார்க்கிறீங்க?
கீழே உள்ள வீடியோவில் செய்முறை தெளிவாக உள்ளது.
    



இந்த அளவுக்கு microwave radiation வெளிப்படும் செல் போன் என்று தெரிகிறதல்லவா?  அவசியத் தேவைகள் தவிர செல் போன் உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது, மக்களே!!!  அது மட்டும்  அல்லாமல் பாக்கெட்டிலும் அதிக நேரம் வைத்து இருப்பது நல்லது அல்ல.....  வேறு ஏதாவது வெடித்து உடம்புக்குள்ளே பாப்கார்ன் ஆகப்போகுது...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

மேற்கொண்டு ஆய்வுகளுக்கு:

Senate Hearing on Cell Phones and Brain Cancer:
  http://www.youtube.com/watch?v=npK5HSxukyA

Wikipedia: 
http://en.wikipedia.org/wiki/Mobile_phone_radiation_and_health

Environmental Health:
http://environment.about.com/od/environment/a/cell_phones.htm

Tuesday, August 24, 2010

பணம் என்னடா பணம்!

"தமிழ் உதயம்"  ரமேஷ்  அவர்கள்,  ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருந்தார்கள். அவர்களுக்கு எனது நன்றி...  

http://tamiluthayam.blogspot.com/2010/07/blog-post.html

இந்த தலைப்பில் எவ்வளவு   அருமையாக அவர் எழுதி இருக்கிறார் என்று அந்த பதிவை வாசிக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிந்து விடும்.   எல்லா கோணங்களிலும் அவர் யோசித்து எழுதி விட்டதால்,  இந்த தலைப்பை நாம  இப்படிக்கா இந்த டீ கடை பெஞ்ச்ல உக்கார்ந்துக்கிட்டு, சூடாக ஒரு வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டுக்கிட்டே பேசுவோமா?  (யம்மா, இந்த எந்திரன் காய்ச்சல் வந்ததில் இருந்து,  திரும்பவும் ஒரு ரவுண்டு ரஜினி படங்களைத்தான்  மாத்தி மாத்தி பாத்துக்கிட்டு இருக்கேன்....... சிவாஜி படத்துல, அந்த பஜ்ஜி  சீன் பத்தி  சொன்னாலே அதிருதுல........ ஹையா.... அதிலும் பணம் டீலிங்தான்...... ஆரம்பமே, இந்த தலைப்புக்கு  அமர்க்களமா அமைந்து விட்டது........... கூல்!)

அவர் தந்து இருக்கும் தலைப்பு:    பணம் குறித்த எனது அனுபவம்  வைத்து ஒரு பகிர்வு. 

நான் இன்னும் millionaire ஆகவில்லை.... ஆன பின்னாலே, அதை பத்தி ஒரு புத்தகமே போடுறேன்...  அந்த புத்தகத்தை, நீங்க உங்கள் பணம் கொடுத்து வாங்கி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   இப்போ,  பணம் குறித்த எனது வெட்டி பேச்சு கருத்துக்களை மட்டும் பார்க்கலாமா?


என்னதான் மாமா, பாட்டிம்மா, தாத்தா  என் கையில காசு கொடுத்தாலும்,  அப்பாவோட சட்டைப் பையில - பெல்ட் பாக்கெட்ல - காசு "சுட்டு"  வாங்கி தின்ன குச்சி ஐஸ் taste தனிதான்.... சரி, சரி....... விட்டா, அப்படியே நம்ம வண்டவாளத்தை எல்லாம், நானே ஒரு flow ல பதிவுலக தண்டவாளத்தில் ஏற்றி விட்டுருவேன் போல.
(சித்ரா, அடக்கி வாசி.......!!!)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்...... எதற்காக இந்திய ரூபாய் நோட்டுல காந்தி தாத்தா சிரிக்கிற மாதிரி படம் போட்டு இருக்காங்க?   நம்ம நாட்டுல, ஒருவர் செய்ய வேண்டிய  வேலையை  -   official கடமையை  - அவர்  செய்யாமல் இருக்கும் போது,  அவரை திட்டி - அடிச்சு -  துவைச்சு - அதை   செய்ய வைக்காமல் - அவருக்கு  அஹிம்சை முறையில்,  பணம் கொடுத்து - படிய வைத்து - அந்த  வேலையை செய்ய வைக்க வேண்டும் என்று நமக்கு  நினைவு படுத்தவா?  யார் கண்டா? இருக்கலாம்.....

அப்புறம்...... பணம் வந்தால், ஒருவருடைய குணம் மாறிடும் என்று சொல்றாங்க..... இல்லைப்பா, ஒருவருடைய உண்மையான குணம் தெரிய வேண்டும் என்றால், பணத்தை  அவருக்கு கொடுத்து பாருங்க,  இல்லை, அவரிடம் இருந்து பணத்தை எடுத்து பாருங்க....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நீங்க வேற,  literal மீனிங் இல்லைப்பா..... பணம் அதிகம் சேரும் போதோ, இல்லை, பணம் ஒருவரை விட்டு போகும் போதோதான், நான் பலரின் உண்மையான குணங்களை கண்டு புரிந்து கொண்டு இருக்கிறேன்..... இது, புகழுக்கும் பொருந்தும்.....

டீக்கடை பெஞ்ச்ல உக்கார்ந்துகிட்டு பழைய தினத்தந்தி பேப்பர் நியூஸ் படிக்கலைனா எப்படி?

திடீர் பணக்காரர்கள் குறித்து, நான் எனது சித்தப்பாவுடன்  வெட்டி பேச்சு பேசிக்கொண்டு இருந்தேன்.  அப்பொழுது அவர்,   தமிழ்நாட்டுல lottery ban வருவதற்கு முன் திருநெல்வேலி பேப்பர்ல வந்த ஒரு நியூஸ் பத்தி சொன்னாங்க.......
திருநெல்வேலி பஸ் ஸ்டாண்ட்ல பிச்சை எடுத்துக் கொண்டு இருந்த ஒருவருக்கு, ஒரு முறை lottery ல சில லட்சங்கள் பரிசாக கிடைச்சுச்சாம்.   அப்போ  நிருபர், "இனி என்ன செய்யப்போறதா இருக்கீங்க?"  என்று கேட்டதற்கு,
" ஒரு டீச்சர்க்கோ டாக்டர்க்கோ லாட்டரி  பரிசு விழுந்தா,  அவங்க செய்யுற வேலையை - பார்க்குற தொழிலை  விட்டுருவாங்களா? எனக்கு தெரிந்த தொழில், பிச்சை எடுக்கிறதுதான்.  lottery பணம் வந்துட்டுனு அதை விட்டுற முடியுமா? ஆனால், ஒண்ணு மட்டும் நிச்சயம் சார்..... எனக்கு ஏற்கனவே ரெண்டு பொண்டாட்டி. இந்த பணம் வந்துட்டே என்று மூணாவது கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்,"  என்று நியூஸ்பேப்பர்ல நிஜமாகவே பேட்டி கொடுத்து இருந்தாராம்.  அவருக்கு ரொம்ப தங்க மனசு......

அப்புறம்,  எனக்கு பிடித்த சில பணம் குறித்த quotes - புதுமொழிகள் - பாத்துட்டு இன்றைய வெட்டி பேச்சை முடிச்சிக்கலாமா?

Every day I get up and look through the Forbes list of the richest people in America.
If I'm not there, I go to work.  ......... Robert Orben 

 It is pretty hard to tell what does bring happiness; poverty and wealth have both failed.
.........  Kin Hubbard

I finally know what distinguishes man from other beasts: financial worries. ........ Jules Renard

There's no reason to be the richest man in the cemetery (grave). You can't do any business from there.
..........Colonel Sanders  (KFC)

A man explained inflation to his wife thus: 'When we married, you measured 36-24-36. Now you're 42-42-42. There's more of you, but you are not worth as much.'  .......... Joel Barnett.

Sunday, August 22, 2010

எனக்கே எனக்கா?


 சில சமயம்,  நண்பர்களுடன் சீரியஸ் ஆக  பேசி கொண்டு இருக்கும் போது கூட ,  intention இல்லாமலே,  ஏனோ காமெடி டைம் ஆகி விடுகிறது.

எனக்குதான்  BLOGGOTOPICTIS  நோய் தாக்கி விட்டதா? ( (எல்லா விஷயங்களையும்  Bird's eye view மாதிரி Blogger's eye  கண்ணோட்டத்துடன் பார்க்க வைக்கும் நோய்)
இல்லை,  வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள், இருக்கும் கவலைகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல், positive ஆக வைத்திருக்க உதவும் நகைச்சுவை உணர்வில் அதிகமாக focus செய்ய ஆரம்பித்து விட்டேனா என்றும்  தெரியவில்லை.  ம்ம்ம்ம்ம்ம்.........

எங்கள் தோழி,  தேன்மொழியை நாங்கள் தேனா என்று அழைப்போம்.  ஒரு சமயம்,  மற்றொரு நண்பருடன் பேச,  தொலைபேசியில் அழைத்து இருந்தார்.
"ஹலோ"
"ஹலோ! நான் தேனா பேசுறேன்."
"ஹலோ,  நீங்கள் தேனா (honey) பேசுங்க. இல்லை, பாலா (milk)  பேசுங்க. முதலில் யார்னு பேரை சொல்லிட்டு பேசுங்க."

..... இன்னொரு சம்பவத்தையும் நான் கண்டிப்பாக சொல்லணும். 

எங்கள் நண்பர் ஒருவருக்கு, சமீபத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது.  வேறு மாநிலத்தில் இருக்கும் அவர்களை, ஒரு லீவில் பார்க்க சென்ற போது, குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகி இருந்தது. நாங்கள் சென்று இருந்த வேளையில்,   அவர்களை காண வேறு ஒரு நண்பரும்,  தன் மனைவியுடன்  வந்து இருந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி, சில நாட்கள் முன் தான் அமெரிக்கா வந்து இருந்தார்கள்.  
நானும்,  அந்த புது பெண்ணும்,  குழந்தையுடன் உள் அறையில் இருந்த நண்பரின் மனைவியை காண உள்ளே சென்றோம்.

நான்:  "எப்படி இருக்கீங்க?"
தோழி: "இப்போ, பரவாயில்லை, சித்ரா."
நான்:  "ரொம்ப கஷ்டமாக இருந்ததா?"
தோழி:  " ஆமாம்,  வலி தாங்க முடியாம இருந்தது. "
நான்:  " அப்படித்தான் இருக்கும்ப்பா... இது ஈஸினு யாரும் சொல்லலியே."
தோழி:  "அதாங்க..... சேர்த்தே இரண்டையும் எடுத்துடுங்க என்று டாக்டர் கிட்ட சொன்னேன். கேட்க மாட்டேனுட்டார். இப்போ, நான் கொஞ்சம் recover ஆகி இருக்கும் நேரம்,   திரும்ப  அடுத்ததுக்கும் போகணும்."
புது பொண்ணு:  "அப்படியா? எப்போ?"
தோழி:   "அடுத்த வாரம்,  டாக்டர்  வர சொல்லி இருக்கிறார்."
புது பொண்ணு:  "இந்தியாவுல இப்படி எல்லாம் விட மாட்டாங்க..... என்ன அமெரிக்காவோ?  ஒரு குழந்தை  பிறந்து, ஒரு மாதம் ஆகி போச்சு...... இன்னும் இரண்டாவதை  டெலிவர் பண்ணலைனா என்ன அர்த்தம்?  டெலிவரி date முடிஞ்சும் இப்படி இருக்கிறது, குழந்தைக்கு நல்லது இல்லை.  உங்களுக்கு பாருங்க, மறுபடியும் வலி, வேதனை...... எல்லாம்."
தோழி:  "ஓ, நீங்க டெலிவரி பத்தி கேக்குறீங்களா?  சரியா போச்சு.  நான் போன வாரம் பிடிங்குன பல் பத்தி சொல்றேன். இன்னொரு பல்லை, அடுத்த வாரம் எடுக்கப் போறாங்க.... டெலிவரி வலியை கூட, பல்லை கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன். பல்லிலேயே வலினா எதை கடிச்சிக்கிட்டு தாங்க முடியும்?"
நான்:  "நியாயமான கேள்வி. அவரவர் வலி  அவரவர்க்கு."

எனக்கே எனக்கா? இப்படி நண்பர்கள், எனக்கே எனக்கா?   ...........
இன்னும் எத்தனை பேர், இப்படி உலகத்துல கடவுள் படைத்து விட்டிருக்காரோ? அதில் எத்தனை பேர் , எனக்கு நண்பர்களாகப் போகிறவர்கள் என்றும் எழுதி இருக்கிறதோ?   ம்ம்ம்ம்ம்ம்ம்........
தம்பட்டம் தாயம்மா:  "எப்படி சித்ரா, வழக்கம் போல......  புலம்புற மாதிரியே,  நல்லா பெருமை அடிச்சிக்குற?
நீ நடத்தும்மா!"

Tuesday, August 17, 2010

மொழி மொழியாம் பழமொழியாம்

 ஓர் நண்பரின் அப்பா, கலகலப்புக்கு பஞ்சம் இல்லாதவர். பழைய கால விஷயங்களையும் கிண்டல் அடிப்பார்.  இன்றைய நிலவரங்களையும் நன்கு விமர்சிப்பார். அவருடன் பேசும் போது, நேரம் போவதே தெரியாது.

"அரசன் அன்று கொல்வான் - தெய்வம் நின்று கொல்லும்."   - பழைய மொழி.
நேர்மையாய் இருக்கும் அதிகாரிகளைத் தான் தமிழக  அரசு,  இன்று "கொல்கிறது" ..........
'இன்றைய அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா,'  என்ற மக்களின் எண்ணப்போக்கும் காரணமோ?

நியூஸ்:
http://timesofindia.indiatimes.com/city/chennai/IAS-crusader-refuses-to-give-up-fight-against-corrupt-forces/articleshow/6238906.cms

அப்படியே,  பழமொழிகள் பற்றி பேச்சு வந்தது.  அவர், "அந்த காலத்தில, பல சமயங்களில் (எல்லா நேரங்களிலும் அல்ல  என்று தெளிவுபடுத்தி கொண்டு) ,    அறிவில் முதிர்ந்தவர்  யோசித்ததை - புரிந்து கொண்டதை  -  அப்படியே பால பாடமாக மற்றவர்கள் மனதில் ஏற்றி விடுவார்கள்.    "ஏன்? எதற்கு?" என்று கேட்க   விடாமல்,   " இப்படி எல்லாம் கேள்வி கேட்டால், சாமி கண்ணை குத்திரும்!" என்று சொல்லி பயமுறுத்தி அடக்கி விடுவார்கள்.  அதற்கும் அடங்கவில்லை என்றால், இருக்கவே இருக்கு "கொள்ளி வாய் பிசாசு" மற்றும் "மல்லிகைப்பூ கேட்கும் மோகினி பேய்," என்றார்.

சில பழமொழிகள் மற்றும் "எதிர்" பழமொழிகள் சுட்டிக் காட்டி,  எப்படியெல்லாம் குழப்பி உள்ளனர் என்று விளக்கினார்.
அவரவர் தங்கள் வசத்திக்கேற்ப - சூழ்நிலைக்கேற்ப - பொருள் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். 

*   தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
அஞ்சு வயசுல, அண்ணன் தம்பி; பத்து வயசுல, பங்காளி.

*  தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை.
   தாயும் சேயும் என்றாலும் வாயும் வயிறும் வேற.

* அகன்று இருந்தால் நீண்ட உறவு;  கிட்ட இருந்தால் முட்ட பகை.
சொந்தம் உதவுற மாதிரி, பந்தம் இல்லாதவன் உதவுவானா? 

*  நாலடி  என்றாலும் தனக்கு என்று ஒரு இருப்பிடம் இருக்கணும்.
அசை போட்டு விழுங்குவது,  மாடு; அசையாமல் விழுங்குவது,  வீடு.

*  ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை பண்ணு.
வாய்மையே வெல்லும். (Honesty is the best policy)

*  அஞ்சினவனுக்கு யானை; அஞ்சாதவனுக்கு பூனை.
பூனைக்கு மணியை கட்டுவது யார்?

*  புலி, பசித்தாலும் புல்லை தின்னாது.
 பசி வந்தால், பத்தும் பறந்து போம்.

*  வாய் உள்ள பிள்ளை, பிழைக்கும்.
நுணலும் (தவளையும்) தன் வாயால் கெடும்.

*  கடவுள் அமைத்த மேடை.  நாம் அதில் ஆடுகிறோம்.
ஆடத் தெரியாதவள்,  மேடை கோணல் என்றாளாம்.

*  கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
 பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.

*   நாய் வாலை நிமிர்த்த முடியாது.
 அடிக்க அடிக்க,  அம்மியும் நகரும்.

*  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் நிற்கிறாள்.
ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே.

*  பெண்ணின் மனதையும்  கடலின் ஆழத்தையும்  கண்டது யார்?
ஆழம் தெரியாமல், காலை விடாதே!

* குட்ட குட்ட குனிகிறவன், முட்டாள்.
பொறுத்தார்,  பூமி ஆள்வார்
(அப்போ, முட்டாள் தான் பூமி ஆள்வார்களா? அவ்வ்வ்.......)

எனக்கு, பம்மல் கே சம்பந்தம் படத்தில் வரும் பஞ்ச் வசனம்தான் ஞாபகம் வந்தது: "பழமொழி சொன்னா
ஆராயக்கூடாது. அனுபவிக்கணும்." 

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன். நீ மனிதன்.


பி.கு.:  மாதவன் சார் அனுப்பியது:  லிஸ்டுல இதுவும் உண்டு..
"ஊக்கமது கைவிடேல் --  முயற்சியுடையார்  இகழ்ச்சியடையார்." and exactly opposite to
"கிட்டாதாயின் வெட்டென மற."



Sunday, August 15, 2010

சோகம் என்றாலும் சிரிப்பு

கடந்த சில நாட்களாக பயணங்கள் ........ இன்ன பிற வேலைகள்......
பதிவுலகம் பக்கம் வர இயலவில்லை.  மீண்டும், பழையபடி பதிவுலகம் பக்கம் உலா வர சிறிது நாட்கள் ஆகும் போல தெரிகிறது.  ஆனால், நிறைய விஷயங்கள் உண்டு. அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். 

  "இடுக்கண் வருங்கால், நகுக...." என்ற வள்ளுவர் வாக்கு, எந்த அளவுக்கு நடைமுறைக்கு உதவும் என்று யோசித்தது உண்டு.  வாழ்க்கையில்,  சில சமயங்களில்  அதை கடைப்பிடித்த போது,  உண்மையில் சூழ்நிலையின் இறுக்கம் குறையத்தான் செய்கிறது.   தாமும்  உறுதியாய் நின்று,  மற்றவர்களின் மேல் தங்களின்  கவலைகளின் தாக்கம் விழாமல் வைக்க  ,    நகைச்சுவை உணர்வு  நன் மருந்தாக  அமைந்து விடுகிறதே!


சவுண்டு பார்ட்டி: 

ஒரு கட்டிடத்தில் இருந்து 15 அடிகள் கால் தவறி  கீழே விழுந்து விட்ட ஒரு தோழியின் தந்தையை (தமிழ் நாட்டில் இருந்து  அமெரிக்கா  வந்தவர்)  காண,  ஒரு மருத்துவமனையின் Surgical ICU வுக்குள் நுழைந்தோம்.  முதுகு தண்டில்,  எலும்புகள் சில பகுதிகளில்  நொறுங்கி விட்டதால்,  இரண்டு அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்து இருந்தது.  முதல் surgery மட்டுமே ,  பத்து மணி நேரங்களுக்கு மேலாக நடந்தது.   வலியின் மிகுதியில் சத்தம் கொடுத்துக் கொண்டு  இருந்தவரை  பார்க்கும் போது, பாவமாக இருந்தது.
ஆதரவுடன் கரம் பற்றி, "அங்கிள், ரொம்ப வலிக்குதா?" என்று கேட்டேன்.
 அவர் ஒரு புன்னைகையுடன் எங்களை பார்த்து,  "இல்லைம்மா. வலிக்கல. சும்மாவே இருக்கோமே என்று அப்போ அப்போ கொஞ்சம் சவுண்ட் விட்டு கொண்டு இருக்கேன்,"  என அந்த நேரத்திலேயும்  அவர் சிரித்துக் கொண்டே சொன்ன போது, அவருடன்  சேர்ந்து எல்லோரும் சிரித்தோம்.


முயற்சி திருவினையாக்கும்: 

ஒரு நண்பரின் மனைவி, கடலை மாவில் ஏதோ இனிப்பு செய்து (முயற்சி செய்து!!!!) கொண்டு இருந்தார்.  அவரிடம்,  "என்ன ஸ்வீட் செய்யப் போறீங்க?" என்று நான் கேட்டதும்,
எந்த வித பதட்டமும் இல்லாமல்,  "சித்ரா, நான் இப்போவே பெயர் வைக்கப் போறதில்லை.... கூழ் மாதிரி வந்தா,  பேசன் (besan = கடலை மாவு) கீர் ;  இளக்கமாக வந்தால், பேசன்  பர்பி;  கட்டியாகிப் போச்சுனா, மைசூர் பாக்.  அதையும் மீறி, கல்லு மாதிரி  ஆகி விட்டது என்றால்,  இருக்கவே இருக்கு எங்கள் வீட்டுக் குப்பை கூடை.  எந்த ஸ்டேஜ்ல வரப் போவுது தெரியாம கிண்டிக் கிட்டு இருக்கேன். கொஞ்சம் பொறுங்க."
(கடைசியில்,  மைசூர் பாக்குக்கும் கல்லுக்கும் இடைப்பட்ட ஒரு புது பக்குவம் வந்தது என்பது வேற விஷயம்! எண்ணிப் பார்த்துட்டேன். என் பற்களின் எண்ணிக்கை குறையவில்லை.  தப்பிச்சேன்டா, சாமி! அந்த இனிப்புக்கு, நாங்க வைத்திருக்கிற பெயர்:  "கல்"லூர்  பாக் )


"பால்" சோறு:

 பார்டிக்காக உணவு தயாரித்து கொண்டு இருந்த தோழிக்கு உதவியாக அவளது அம்மாவும் நானும் இருந்தோம். அப்பொழுது அங்கே தன் குழந்தைக்கு சோறு ஊட்ட வந்த இன்னொரு தோழி,  சூடான சாதம் எடுத்து தட்டில் போட்டு விட்டு,  fridge உள்ளே இருந்த கிண்ணத்தில் இருந்ததை எடுத்து சாதத்தில் ஊற்றிய பின் தான்,  தான் எடுத்தது தயிர் இல்லை,  மீதியான தோசை மாவு என்று தெரிந்து கொண்டாள்.  அப்பொழுது தோழியின் அம்மா, " என்னம்மா இது?  தோசை மாவுக்கும் தயிருக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கே?" என்று கேட்டார்கள்.    இவள்  முகம் கோணாமல் - சளைக்காமல் - சட்டென்று, " ஆன்ட்டி,  நான் வெளுத்ததெல்லாம் தயிர் என்று நினைக்கிற நல்ல மனசு உள்ளவ. வித்தியாசம் தெரியல," என்று பதில் சொன்னதும் எல்லோரும் சிரித்து விட்டோம்.

சுவாசத்தில் கலப்பாயே: 

என் அமெரிக்க தோழி ஒருத்திக்கு  கொஞ்சம் depression .  ஒரு
change of place க்காக எங்கள் வீட்டுக்கு வந்த பொழுது,   Jaya Max இல் சில பாடல்களை, அவளுடன்  சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தேன்.   தொடர்ந்து வந்த மூன்று பாடல்களில்,   ஹீரோ ஆசையுடன் முத்தமிட நெருங்குவதும், ஹீரோயின் மேடம் முகத்தை திருப்பி கொண்டு விலகி விடுவதுமான வழக்கமான சீன்கள்.  அதை கவனித்த தோழி, "ஹீரோக்கள்  முத்தமிட வரும் முன் , வாய் துர்நாற்றத்துக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.  ஹீரோயின்கள்   சகிக்க முடியாமல் எப்படி டீசன்ட் ஆக  விலகி விலகி போகிறார்கள்," என்று சொன்ன பிறகு தான், ஒரே விஷயம், அடுத்தவர் பார்வையில் -  வேறு அர்த்தத்தில் -  எப்படி எல்லாம் தெரிகிறது  என்று நினைத்து சிரித்தேன். அவளுடைய depression நேரத்தில், எப்படி பேசுவது - எதை பற்றி பேசுவது என்று தெரியாமல் அமைதியாய் அது வரை இருந்த இரண்டு பேரும்,  அதன் பின் பல விஷயங்களை பற்றி பேச ஆரம்பிக்கவும் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. 


காதல் அணுக்கள் - neutron- electron: 

நண்பர் ஒருவர்,  ஒரு மாதமாக  சரியாக சாப்பிடாமல் - தூங்காமல் - இரவு பகல் - சனி ஞாயிறு - என்று ஒரு  Human Health  research project இல் மூழ்கி, அவரது லேப் வேலையே  (lab work ) கதி என்று இருந்தார்.  அதன் பின்னும்  அவர் எதிர்பார்த்து இருந்த ரிசல்ட் வராததால், வெறுத்து போய்விட்டார். மீண்டும்  இப்படி வொர்க் செய்ய  வேண்டுமே என்ற எரிச்சல் வேறு.
வீட்டுக்கு வந்ததும்,  மிகவும் ஆதரவாக அவர் மனைவி, " நீங்கள் கொஞ்சம் நேரம் டிவி பார்த்து கொண்டு, சோபாவில் ரிலாக்ஸ் செய்ங்க.   நான் காபி கொண்டு வரேன்," என்றார்.
அந்நேரம்,   நமீதா பாடல் ஒன்று தமிழ் சேனலில் ...... கோபமும் எரிச்சலுமாய் வந்து எங்களோடு  உட்கார்ந்தவர், நமீதாவை பார்த்து விட்டு சத்தம் போட்டு சிரித்தார்.
"செல்களை (cells)  மொத்தமாக பார்த்தால், ரிலாக்ஸ் ஆகிறது.  அதே,   ஒற்றை ஒற்றை செல்லாய் பார்த்து cell research செய்து fail ஆகிவிட்டால்,  stress அதிகம் ஆகி விடுகிறது," என்று சொல்லி சிரித்தார்.


"Laughing faces do not mean that there is absence of sorrow;  but it means that they have the ability to deal with it." ....... William Shakespeare. 
 A great sense of humor can make the dull moments, brighter.  


Monday, August 2, 2010

அவள் ஒரு "தொடர்பதிவு"

உருப்படியாக (????????????????????) நானே ஒரு டாபிக் யோசித்து எழுதி,  ஒரு மாதத்துக்கு மேலாக ஆகி விட்டது.... தொடர் பதிவு தயவில் -  மற்ற பதிவர்கள் கொடுத்த டாபிக் தயவில்   எழுதி .....ஜூலை மாதத்தை  ஓட்டி இருக்கேன் என்று இன்றுதான் பார்த்தேன்.... அவ்வ்வ்வ்.....

அப்படியும் இப்படியுமா போயி ஆகஸ்ட் வந்துவிட்டது.  என்ன எழுதலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.... எழுத எத்தனையோ விஷயங்கள்.......... ம்ம்ம்ம்..... என்ன எழுதலாம்?

மீண்டும், இந்த வாரத்தில் வரும் நான்கு நாட்கள் பயணம் தான் நினைவுக்கு வந்தது.  அந்த நாட்களில், ப்லாக் பக்கம் வருவது சாத்தியப் படாதே என்ற "கவலை" வேறு.....  இந்த நினைப்ஸ் மேட் மீ சிரிப்ஸ்  யா.....

எத்தனயோ வேலைகளுக்கு மத்தியில், ஒரு பொழுது போக்காக ப்லாக் என்று ஆரம்பித்து விட்டு,
இப்பொழுது, ப்லாக் வேலை (இடுகைகள்,  பின்னூட்டம்,  லைக், பரிந்துரை) மத்தியில் அத்தனை வேலைகளையும் செய்கிறேனோ என்ற பீலிங்க்ஸ்யா.....   ம்ம்ம்ம்..... என்ன செய்யலாம்?


சரி, இந்த வார quota வுக்கு என்ன எழுதலாம்?  என்னமோ பதிவு  போடலைனா,  கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்து விடும் என்கிற நினைப்பு.... ...... சித்ரா, உனக்கே இது டூ மச்..... மச்சி,  மச்சான்,  மச்சினியா தெரியல?

என்ன பதிவு போட? ம்ம்ம்ம்.....  என்ன இடுகை போட?
யோசிக்காம போடு....... கூகிளார் கொடுத்த "சொத்து" உரிமையோடு ......

"சும்மா"  பற்றி கூட எழுதியாச்சு...... இனி,   சும்மா வேற  என்ன எழுதலாம்?

சமூதாய அக்கறை கொண்டு ஏதாவது எழுதலாம்.  சீரியஸா எழுதுற மூடு இல்லை.... ம்ம்ம்.... வேறு என்ன எழுதலாம்?


ஒரு பெரிய ஆழமான விஷயத்தை எடுத்து,  நாலே பேருக்கு புரிகிற மாதிரி இலக்கியம் எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு "புலம்புற" மாதிரி மொக்கை எழுதலாம்.....
ஒரு விஷயத்தை எடுத்து,  நாலு பேருக்கு கூட புரியாத மாதிரி எழுதலாம்.....
ஒண்ணுமே இல்லாத விஷயத்தை எடுத்து,  நாலு பேரு வந்து "கலக்கல் பதிவு" என்று சொல்ற மாதிரி எழுதலாம்.....
ம்ம்ம்ம்....... என்ன எழுதலாம்?

 
 
நம்ம  புளப்பு  "சிரிப்பா சிரிக்கிற" மாதிரி வாழ்க்கை போனால்,   tragedy  -
நம்ம புளப்பை பார்த்து நாமே சிரிக்க முடிந்தால்,  காமெடி.
ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?

 என்னைப் போய் சிலர், "பிரபல" பதிவர் என்று சொல்கிறார்கள்.  இறை அருள்,  பதிவுலக நண்பர்களின் ஊக்கமான பின்னூட்டங்கள்,  அவர்களின் பரிசாக பரிந்துரைகள் மற்றும் "லைக்"கள்,  என்று  இன்னும் "பிற(ர்) பலத்தில்" இருப்பதை சொல்கிறார்களோ?  எல்லோருக்கும் நன்றி சொல்லி எழுதலாம்.... ம்ம்ம்ம்.... எப்படி சொல்லி   எழுதலாம்?

 பதிவுலக நண்பர்கள்,  உள்ளதை உள்ளபடி பின்னூட்டங்களில் சொன்னால்,  என்ன ஆகும்?  எனது இடுகைகளுக்கு வரும் பின்னூட்டங்களில் எல்லோரும் உண்மையான feedback மட்டுமே சொல்ல வேண்டும் - ஆலோசனை மட்டுமே தர வேண்டும் என்று சொன்னால் - என்னால் எந்த அளவுக்கு ஏற்று கொள்ள முடியும் - வரவேற்க முடியும் என்று யோசித்து எழுதலாம்........ ம்ம்ம்ம்ம்ம்...... என்ன எழுதலாம்?


இறைவன் vs மனிதன் என்று ஏதாவது எழுதலாமா?
மனிதன் இருப்பது உருவத்திலா?
மனிதம் உள்ள இதயத்திலா?
 இறைவன் இருப்பதும் உருவத்திலா?
இருக்கும் நம்பிக்கையிலா?
மனிதனின் புரிதல்,  பகுத்து அறிவதிலா?
இறையன்பை  பகுத்து உணர்வதிலா?
ம்ம்ம்ம்ம்ம்........ என்ன எழுதலாம்?

இன்னும் பெண்டிங்ல இருக்கிற தொடர் பதிவு அழைப்புகளுக்கு ஏற்ற மாதிரி யோசித்து எழுதலாம்....ம்ம்ம்ம்.... எப்பொழுது எழுதலாம்?

சரியா போச்சு..... "அவளோட எண்ணங்கள்" என்று தலைப்பு வைத்து இருக்கலாமோ?
சே,..... இந்தியாவில் இருந்து வந்து இருக்கும் நண்பரின் பெற்றோர்களை impress பண்றேன்   என்று அவர்களுக்கு கம்பெனி கொடுக்க,   டிவியில்  பழைய பாலச்சந்தர் படம், "அவள் ஒரு தொடர்கதை" பார்த்து விட்டு,  "ஞே"  "ஞா"  " ஞி"   " ஞீ "   "ஞௌ"   என்று முழிக்கும் போது பதிவு எழுத வரக்கூடாது..... முடிவே இல்லாத முடிவு  .....முடிவு எடுக்க முடியாத/தெரியாத முடிவு ஆகி போச்சுல.....  ஸ்ஸ்ஸ்..... அப்பா.... எனக்கே முடியல...... இதோட முடிச்சிக்கிறேன்.....
The End !!!

ஸ்ரீராம். said... விகடன் குட் ப்லாக்ஸ்ல உங்கள் இந்தப் பதிவு....

http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp