Wednesday, December 23, 2009

HAVE A HAPPY 2010!

ஒரு பத்து நாட்கள், எல்லோரும் என் இம்சை இல்லாம ஜாலியா  இருங்க. மீண்டும் ஜனவரி 5 போல  சந்திக்கிறேன். இடுகைக்கும் லீவு. பின்னூட்டங்களுக்கும் லீவு.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்ஜாய்.......... மக்கா, என்ஜாய்.............


May God bless us all and our loved ones!
MERRY CHRISTMAS!
HAPPY NEW YEAR!
HAVE A HAPPY 2010!

Monday, December 21, 2009

என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே.........

(என் முந்தைய பதிவு: http://konjamvettipechu.blogspot.com/2009/10/thirunelveli-halwa.html -
கிட்ட தட்ட ரெண்டாம் பாகம், இது என்று வைத்து கொள்ளலாம். - ஒ, நீங்க பத்தாம் பாகம்னு  வச்சுக்க போறீங்களா? ஒ.கே. உங்க இஷ்டம்.)


- நிச்சயமா கடவுள் சீரியஸ் சாமி  கிடையாது. என் வாழ்க்கையில் நான் சந்தித்த சில நபர்களை பற்றி நினைக்கும் போது, இந்த  காமெடி characters உருவாக்கிய கடவுள்  ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்று மனதில் எண்ணி கொள்வேன். சினிமா  காமெடி மாதிரி , நிஜ வாழ்க்கையில் நடந்தா என்ன பண்ணுவீங்க?  

காட்சி 1 - காமெடி 1

கந்தசாமி படத்தில், ஒரு காட்சியில், ஸ்ரேயா கேட்கும் கேள்விகளுக்கு விக்ரம், பதில் கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பார். ஸ்ரேயாவுக்கு அது எரிச்சலை தரும்.

காலேஜ் படிக்கும் போது, என் தோழர், தினேஷுக்கு தேவன் என்று ஒரு அறை தோழர் - அதாங்க, காலேஜ் ரூம் மேட் - இருந்தார். அறை தோழர் - கவுண்டமணிக்கு செந்தில் "அறை" (உதை) தோழர். விவஸ்த்தை இல்லாமல், வயசு வித்தியாசம் இல்லாமல், வடிவேலு பலரின் "அறை" (அடி) தோழர். நிஜ வாழ்க்கையில், அருவாள், போலீஸ், அது இதுன்னு பிரச்சினை இல்லைனு வைங்க, நிச்சயமா தினேஷுக்கு தேவன்தான் "அறை" தோழரா இருந்திருப்பார்.

தேவன் ஒரு நல்ல மனுஷன்தான். ஆனால் கேள்வி என்ற ஆயுதத்தை, தன் நாக்கில் வைத்து கொண்டு சில சமயம் போட்டு தள்ளி விடுவார். ஒரு சமயம், அவர் கேள்வி தொல்லை தாங்க முடியாமல், தினேஷ் தேவனிடம், "நீ கொஞ்ச நேரம் கேள்வி எதுவும் கேட்காம இருக்கியா?" என்று கேட்டு கொண்டதுக்கு கூட தேவன் சளைக்காமல், "எதற்கு?" என்று கேட்டார்.

காட்சி  2 - காமெடி  2:

கருணாஸ், பொல்லாதவன்  படத்தில் தனுஷ், சந்தானம் மற்றும் சில நண்பர்களிடம், "ஏய் நீ கேளேன், மச்சான் நீ கேளேன் ....." என்று ஆரம்பிப்பார். அந்த காமெடி பீசை பாக்கும் போது, எங்கள் தோழர் ராமநாதனை  நினைக்காமல் இருக்க முடியவில்லை.

எங்களது அரட்டை நேரத்தில், அவரும் உட்க்கார்ந்து கேட்டு கொண்டு சிரிப்பார். திடீரென்று, தானும் ஜாலியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று தோன்றி விடும் போல.....
இப்படித்தான், நீ கேளேன் - நீ கேளேன் - என்று ஆரம்பம் ஆகிவிடும். "ஆஆஆ" எங்களிடம் - "ரம்பம்" அவரிடம்.
இப்போ பஞ்ச் லைன் வரும், இப்போ ஜோக் வரும் என்று நாம் காத்து கொண்டிருக்க, அவர் மட்டும் ஏதோ சொல்லிவிட்டு, பெரிதாக சிரித்து கொண்டு இருப்பார். தன் "கடிக்கு" அவரே சிரிப்பார். அவர் மட்டும் சிரிப்பார். நாங்கள் நெளிவோம். முழிப்போம்.

காட்சி 3 - காமெடி  3:

மன்னன் படத்தில் கவுண்டமணியின் அறிமுக காட்சியில், ரஜினி அவரிடம், "என்ன படிச்சிருக்க?" என்று கேட்பார். அதற்கு கவுண்டமணி, "எந்த வேலையும் செய்ய தெரியாத அளவுக்கு படிச்சிருக்கேன்" என்பார்.

ரோகன் என்பவரை ஒரு நண்பர் வீட்டில் சந்தித்தோம். எங்கே வேலை செய்யுறீங்க என்று கேட்டதற்கு, "நான் US க்கு மேல் படிப்புக்கு வந்தேன். சுமாரா போச்சு. இப்போ வேலைக்கு    interviews  அட்டென்ட் பண்ணா ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ இங்கேயே green card வாங்கி settle ஆன doctor பொண்ணு இல்ல dentist பொண்ணு தேடி பாத்தேன். ஒண்ணும் செட் ஆகலை. நர்சு பொண்ணு கூட கிடைக்கலை.  ஏன் என்றே தெரியவில்லை. இப்போ ஒரு hospital  attendant , green card application போட்டு காத்திருக்கும்  நம்மூரு  பொண்ணு அமைஞ்சுடிச்சு. அவ சம்பளமே இப்போதைக்கு போதும். அப்புறம் மெல்ல நானும் வேலை தேடிக்குவேன்."
என்ன கொடுமை சார், இது?

காட்சி 4 - காமெடி  4:


கிரி படத்தில், எக்கச்சக்க உதை வாங்கி திரும்பி வந்த வடிவேலுவை  பாத்து, "இவ்வளவு அடிக்கிற வரை சும்மாவா  இருந்தீங்க?" என்று கேட்டதற்கு, வடிவேலு விளக்கம் சொல்லி விட்டு, " அவன் என்னை பாத்து ரொம்ப நல்லவன் என்று சொல்லிட்டான்." என்பார்.

கல்யாண சுந்தரம் என்ற மனிதரை, நான் மறக்க முடியாது.
"இந்த பர்கர் நல்லா இருக்குமா?"
"எப்படி சார் சொல்ல முடியும்? எனக்கு பிடிக்கும். நீங்க சாப்பிட்டு பாத்தாதான் உங்களுக்கு தெரியும்."
"கரெக்ட். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு taste. இதுக்குதான், ஒவ்வொரு சாப்பாட்டு பொருளுக்கும், 'SWAD' (ஸ்வாத்) என்ற கணக்கில், ஒன்றிலிருந்து பத்துக்குள் நம்பர் கொடுக்க வேண்டும். அவர் அவருக்கு எந்த நம்பர் ஸ்வாத் உள்ள உணவு பொருட்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். நமக்கு பிடித்த SWAD நம்பருடைய  எந்த உணவு பொருளையும் தயக்கமின்றி ருசி பாக்கலாம். இப்ப நான் எதுக்கு $7  செலவு செய்ய வேண்டும்?" என்று பேசி கொண்டே .......................என்னை,  அமெரிக்காவில் ஆட்டோ இல்லாமலே கூட்டிட்டு போய் கொத்து கறி பண்ணிட்டார். ஸ்வாத் என்றால் ஹிந்தியில் ருசிக்கு பொருந்தும் என்று ஹிந்தி tuition வேறு.
அதுதான், நான் அவருடன் கடைசியாக பேசியது. அலறி அடித்து ஓடியவள், அவர் இருக்கும் திசை இன்று வரை போனதில்லை.........................இவர் என்னிடம், இப்படி சொன்னதை  என் நண்பர்களிடம் சொல்லிய போது, "எப்படி சித்ரா, அந்த ஆளு உங்களை  இந்த அளவு "அறுக்குறதுக்கு" விட்டீங்க?" என்றார்கள்.
"அவர் பேசுனா, யாரும் கேட்க மாட்டேங்குறாங்க. நான் அமைதியா கேக்குறேன். நான் ரொம்ப நல்லவள் என்று சொல்லிட்டாரு" என்றேன். எல்லோரும் ஒரு லுக் விட்டாங்க பாருங்க.....

காமெடி காட்சிகளை  தொடர்ந்து பார்க்கிறேன் - சிரிக்கிறேன் - திரையிலும் நேரிலும்.

Thursday, December 17, 2009

குழந்தை கால நட்பு


முதல்   நட்பு




நிலா நிலா ஓடி வா என்றால்

நில்லாமல் வந்து விடும் என்று நினைத்த பருவம்.
எழுதும் குச்சியை பொம்மை ஆக்குவதோ
எதுவும் இல்லாமல் ஊசி ஆக்குவதோ
என்ற கவலை மட்டும் இருந்த பருவம்.
கண்ணீரால் கத்தி சாதிக்க முடியாததையும்
கன்ன குழி சிரிப்பினால் சாதித்த பருவம்.
அ ஆ இ ஈயும் அம்மா இங்கே வாவும்
அறிந்தாலே அறிவாளி என்று இருந்த பருவம்.
அழ வைக்காமல் இருந்தாலே -
நட்பு என்று புரிந்தும் புரியா பருவம்.
ஆதாயம் தேடி வந்ததில்லை;
அழகு பார்த்து சேர்ந்தது இல்லை;
செல்வத்தின் அளவு  தெரிந்ததில்லை;
சொல்வது கூட எல்லாம் புரிந்ததில்லை.
பால் வடியும் முகத்துடன் என் அருகில்  இருந்த
பால்ய தோழி, இன்று இருக்கும் -
இடமோ உருவமோ பருவமோ முகமோ  நானறியேன் -
வெள்ளை மனதில் வெளிப்பட்ட அந்த நட்பின் வெளிச்சத்தில்,
நாட்கள் கடந்தும் நாடுகள் தாண்டியும்
நல்ல நண்பர்களை கண்டு கொண்டு நலமுடன் - நான்.
நீ எங்கிருந்தாலும் இறை அருள் இருக்க
நீண்ட வேண்டுதலுடன், நினைத்து வாழ்த்துகிறேன்.

Monday, December 14, 2009

ஒரு சிரிப்பின் வலி



போன பதிவில் ஒருவர், நான் கொஞ்சம் சீரியஸா சில விஷயங்களை எழுதலாமே என்று பின்னூட்டம் போட்டிருந்தார். எனக்கு சுகமில்லை என்றால்  கூட சீரியஸ் ஆகுமா என்று என் நெருங்கிய நண்பர்கள் என்னை கேலி செய்வதுண்டு. அதனால், நமக்கு நல்லா வரும் சிரியஸ் விஷயத்தை பற்றியே ஒரு ஆராய்ச்சி பண்ணலாம் என்று முடிவு பண்ணி, இதோ ஒரு பதிவு:


"கடி"த்தாலும் சிரிப்பு:
வாய் விட்டு சிரிச்சேன் அப்படிங்குறாங்க. எனக்கு புரியவில்லை. வாயாலே தானே சிரிப்போம். வாயை விட்டுட்டு எப்படி சிரிக்க முடியும்?

சிரித்து வாழ வேண்டும்:
திரு. NSK அவர்கள், ஒரு பாடலில் நிறைய விதங்களில் சிரித்து காட்டியதாக என் அப்பா சொல்வார்.
யோசித்து பார்த்தேன். சிரிப்பில் தான் எத்தனை உணர்ச்சிகள் ஒளிந்து கொள்கின்றன?
அத்தனை உணர்ச்சிகளையும் சிரிப்பில் காட்டி, சிரித்து வாழ வேண்டும் போல.

புன் சிரிப்பு
சந்தோஷ சிரிப்பு
குதூகல சிரிப்பு
ஆதரவு சிரிப்பு
குழந்தை சிரிப்பு
தெய்வீக சிரிப்பு
சிறு புள்ள (த்தனமான) சிரிப்பு
காரிய சிரிப்பு
கன்னியின் சிரிப்பு
மயக்கும் சிரிப்பு
வெட்க சிரிப்பு
வெற்றி சிரிப்பு
ஆணவ சிரிப்பு
அலட்சிய சிரிப்பு
கேலி சிரிப்பு
கிண்டல் சிரிப்பு
நக்கல் சிரிப்பு
அசட்டு சிரிப்பு
நமட்டு சிரிப்பு
கேன(த்தனமான) சிரிப்பு
கிறுக்கு(த்தனமான) சிரிப்பு  (லூசு சிரிப்பு)
கோப சிரிப்பு
கொக்கரிக்க சிரிப்பு
எகத்தாள சிரிப்பு
வில்ல (த்தனமான) சிரிப்பு
வில்லங்க சிரிப்பு
அவமான (படுத்த) சிரிப்பு
கேவல சிரிப்பு
விரக்தி சிரிப்பு
சோக சிரிப்பு
இன்னும் சில உணர்வுகள், அந்த சிரிப்புக்கு பின்னால். பயங்கர சிரிப்பையும் சேர்த்துக் கொள்ளலாமோ?

தலையில் அடித்து கொண்டு சிரி:

எங்கள் ஊரு சிங்காரி - யார் அவள்?
இவள் நடந்தால் காம நெடி.
இவள் சிரித்தால் காமெடி.
இவள் பேசினால் செம கடி.
இவள் பார்த்தால் செத்து மடி.
இவளிடம் இல்லாத சரக்கு -
சில நூறு இருக்கு.
எங்கள் ஊரு சிங்காரி - யார் அவள்?
இட்லி ஊரில் பட்லி இவள்.
வட இந்திய ஊர்கள்,
சிங்கார சென்னைக்கு தந்த
வரமா? இல்லை, சாபமா? - இவள்
ஒருத்தியா, இல்லை புற்றீசலா?
bollywoodil போணி ஆகாத இவள் தேவை -
kollywoodil துணி இல்லாத கலை சேவை.
தமிழ் பட heroine -
என்ற பெயரில் நமக்கு அஜீரணம்
கொடுக்கும் இந்த மைதா மாவு போண்டாக்கள்.
--------ஒண்ணு ரெண்டு படங்களில் தலையை (ஓகே, ஓகே, "உடம்பு" பூரா ) காட்டிட்டு காணாமல் மறைந்து போகும் கதாநாயகிகளுக்கு சமர்ப்பணம். இந்த நடிகைகள், success ஆனால் கோயில் கட்டி ஆடு பலி கொடுக்குறாங்க. இல்ல, அதுக்கும் ஒரு படி மேல போய், டிவி ஸ்டேஷன் வச்சு, செம்மொழி தமிழையே பலி கொடுக்குறாங்க. புளப்பு சிரிப்பாய் சிரிக்குது. தலையில் அடித்து கொண்டு சிரிக்கும் இந்த சிரிப்புக்கு தமிழ்  நெஞ்சு வலிக்க வேண்டியதுதான்.
மற்றுமொரு டிவியில் ஒரு அவஸ்தை சிரிப்பை வச்சுகிட்டு ஒருத்தர்,  தன் புளப்பை நடத்திக் கொண்டு, நம்மை கஷ்டப் படுத்தி கொண்டு இருக்கிறார்.

சிரித்தாலும் ஏனோ  வலிக்குது: 

கொல் என்று சிரித்தாள்.
சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாயிருச்சி.
ரொம்ப சிரிச்சி வாய் வலிக்குது.
கீழே விழுந்து உருண்டு சிரிச்சேன்.
நல்லா  சிரிச்சதுல, கண்ணுல தண்ணியே வந்திட்டு.
மொக்கை போட்டான். ரத்தம் வந்துச்சு.

ஏன், ஏன், ஏன், ஏன்...............???
சந்தோஷத்தால் வரும் வலி, ஒரு சுக வேதனையோ?
நோகும் வரை சிரிப்பதில் தான் சந்தோஷத்தின் உச்சம் இருக்கிறதா?
வலி கொண்டுதான் சிரிப்பின் வலிமையையும் அளக்கப்படுகிறதா?
துன்பம் வரும்போது சிரிப்பவர்கள், சோகத்தில் இன்பம் காண்கிறார்களா?
இல்லை, சிரித்து சோகத்தின் கடுமையை குறைத்து கொள்கிறார்களா?

இன்று என் ஆருயிர் அப்பா என்னை விட்டு மறைந்து, 18 நாட்கள் ஆகிவிட்டன. அவரை நினைத்து அழ உட்கார்ந்தால் கூட, அவரின் மித மிஞ்சிய நகைச்சுவை உணர்வின் நினைவலைகள் எனக்குள் வந்து என்னை சிரிக்க வைக்கிறது. சிரிக்கிறேன் - - - - - வலிக்கும் வரை, "வலி"யை மறக்க .............. !

Thursday, December 10, 2009

அமெரிக்க பொருளாதாரமும், என் வீட்டு அடுப்பும்.

வாங்க, வாங்க, வாங்க......
தலைப்பை பாத்த உடனேயே, நம்ம வீட்டு வாசலில் காலை கைய வைப்பீங்கன்னு தெரியும்.
வாங்க, காபி குடிச்சிக்கிட்டே பேசலாம்......... இன்னும் என் வீட்டில் அடுப்பு எரியுது. இறைவனுக்கு நன்றி.

நான் அமெரிக்கா வந்தது, ஏதோ நான் இல்லாமல் உலகம் இந்த பக்கம் சுத்த மாட்டேங்குது என்பதற்காக இல்லை.
நான் இங்கு மேல் படிப்பு படிக்கவோ, இல்லை வேலை வெட்டி என்று பெரியதாய் சாதிக்கவோ வரவில்லை.
எல்லாம், இந்த கல்யாணம் காட்சினு ஆனவுடனே, ராமன் இருக்கிற இடம் சீதைக்கு அயோத்தி - சாலமன் இருக்கிற இடம் சித்ராவுக்கு அமெரிக்கான்னு (ஹி,ஹி,ஹி,...) வந்ததுதான். அது மட்டும் இல்ல, என்னுடைய  தினுசுக்கு சைஸ் உக்கு வாய்க்கு,  எந்த ராவணன் தூக்கிட்டு போக போறான்? பேசாம, பெட்டியை கட்டுனோமா மூட்டையை தூக்குனோமானு, அமெரிக்கா வந்துட்டேன்.

நம்ம கதை, இப்படி இருக்க, ஊருக்கு இந்த ஜூனில் - நம்மை பெத்தது, நம்ம கூட புறந்தது, நம்ம கூட படிச்சது, நம்ம கூட வளர்ந்தது, நம்ம கூட ஊரை சுத்தனது எல்லாம் தமிழ் நாட்டில் நமக்காக வடை சுட்டு வச்சிட்டு காத்துக்கிட்டு இருக்காங்கலேன்னு   போய் பாத்தேன். அப்போ பக்கத்தில் இருந்த சிலர்,  ஒபாமா ஏதோ அமெரிக்கா ambassador போஸ்ட் கொடுத்து என்னை அனுப்பி வச்சிருக்கார்னு கேள்வி மரியாதை குடைச்சல் மரியாதை பண்ணி காச்சி எடுத்துட்டாங்க பாருங்க........... ஐயா, சாமி, ஆளை விடுங்கனா கேட்டாத்தானே?
இங்கேயே தலையில் ஆயிரத்து எட்டு சிக்கு சிணுக்கு வச்சுக்கிட்டு, அமெரிக்க தலையில் பேன் பாக்குறாங்க.

எங்க வீட்டு பொருளாதார விவகாரமே எனக்கு முழுசா புரிஞ்சிக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குது. நான் எங்கே அமெரிக்கா பொருளாதாரத்தை பத்தி கருத்து சொல்ல? விட மாட்டேனுட்டாங்க...... ஒபமா கிடைக்கவில்லை, அமெரிக்கா வில் இருந்து நீதான்னு கிடைச்சேனு, கேள்வி மேல் கேள்வி கேட்டு குடஞ்சாங்க:
இவங்க உண்மையிலேயே உலக நல விரும்பிகளா? இல்லை, உள்ளூரு வயித்தெரிச்சல் கோஷ்டிகளா?

"உலக நல விரும்பி":   இந்த பொருளாதார சீரழிவுக்கு காரணம், அளவுக்கு அதிகமா கடன் கொடுத்த வங்கிகள் காரணமாமே?
வெட்டி பேச்சு, சித்ரா:   கடன் கொடுத்த வங்கிகளுக்கு திருப்பி கொடுக்காத சொங்கிகள் காரணம்.
இப்போ நீங்க அன்னைக்கு, சென்னை போறதுக்காக வாங்கிட்டு போன travel bag (சின்ன suitcase) திருப்பி தராமல் இல்லையா, அது மாதிரி.

"உலக நல விரும்பி":  கார் தாயரிப்பு நிறுவனங்களும், இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு பலியாமே?
வெட்டி பேச்சு, சித்ரா:  ஆமாம், தினமும் காலையில் 20 ford cars, 20 chevrolet cars பலி மேடையில் உயிரை கொடுத்துகிட்டு இருக்கின்றன.

"உலக நல விரும்பி":  ஒபாமா வந்தால், ஏதோ பெருசா கிழிக்க போறார்னு நினைச்சேன்.
வெட்டி பேச்சு, சித்ரா:  ஆமாம், இங்க சக்கர நாற்காலியில் உக்கார்ந்த்துகிட்டு படுத்திட்டு கிழிக்கிற தலைவர்கள்  அளவுக்கு அவராலே எப்படிங்க முடியும்?

"உலக நல விரும்பி": புஷ் எல்லாம் ஒரு அரசியல் தலைவரா?
வெட்டி பேச்சு, சித்ரா: இல்லங்க. தன் நலம், தன்  குடும்ப நலம், தன் தோழி நலம், தன் சினிமா நலம், தன் பண நலம், தன் ஜாதி நலம் மட்டும் அரசியல் கொள்கைகளாய் வைத்திருக்கும் நம் ஊரு  அரசியல் தலைவர்களே, தலைவர்கள்.

"உலக நல விரும்பி":  அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலை இல்லைன்னு சொல்லிட்டானமே?
வெட்டி பேச்சு, சித்ரா: இந்தியாவிலேயே, இந்தியர்களுக்கு இந்தியர்கள் வேலை இல்லைனு சொல்றதை எவ்வளவு கஷ்டப்பட்டு பொறுத்துக்கிட்ட இந்தியன் ஒருவன்,  இப்படி அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்காக எப்படி  கவலை  படுகிறார்? வாழ்க அவரது பொது நல சிந்தனை!

"உலக நல விரும்பி":  உங்க கணவருக்கும் வேலை இல்லைன்னு சொல்லிட்டா, திரும்ப இந்தியா தானா?
வெட்டி பேச்சு, சித்ரா: சார், சத்தியமா சொல்றேன். உங்க வீட்டில் வந்து உங்க சோத்தில் பங்கு கேக்க மாட்டேன். அந்த travel bag திருப்பி கேட்டுருவோனு இவ்வளவு பயமா?  சாமி, முடியலை.

உலக நல விரும்பி: நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?
வெட்டி பேச்சு, சித்ரா: . உங்க வீட்டில் அடுப்பு எரிய,  gas  cylinder வாங்க இன்னும் நாயா பேயா சுத்தி சமாளிக்கிறதை விடவா?

"உலக நல விரும்பி":  அங்கே பொருளாதாரம் எப்போதான் முன்னேறும்?
வெட்டி பேச்சு, சித்ரா: இதோ நான் திரும்பி போய், கஜானா சாவியை ஒபாமா கையில் திருப்பி கொடுத்த உடனே.

இவர் வெட்டி கவலை - வெளி ஊர் கவலை - உலக கவலை - படுற அளவுக்கு, இவர் வீட்டு கவலையும் நாட்டு கவலையும்  கருத்தில் கொண்டு ஏதாவது செஞ்சிருந்தா, அமெரிக்க பொருளாதாரம் இவரை ஏன் பாதிக்குது? இந்நேரம், அமெரிக்கா, இந்தியாவிடம் அல்லவா பொருளாதார உதவிக்கு நிற்கும்.  என்னது, இது என் கவலயா?  ஐயோடா.....

Monday, December 7, 2009

எலியா பொறந்தாக் கூட மச்சம் வேணும்ப்பா

குயவன் கையில் களிமண்ணை போல கடவுள் கையில் நாம்.................

எங்கள் ஊரில் இருந்து ஒரு மணி நேரம் கார் பயண தொலைவில் இருக்கும் ஒரு தமிழ் நண்பரை சந்திக்க குடும்பத்துடன் சென்றோம். அவர் இருப்பது ஒரு farming community மத்தியில். நம் ஊரில் இருக்கும் கிராமங்களை போல. ஆமாங்க, அமெரிக்காவிலும் இப்படி இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  பாரதி ராஜா, அடுத்த படம் எடுக்கும் போது அமெரிக்கா கிராமங்களையும் நினைவில் வைத்து கொள்ளலாம். "என் இனிய அமெரிக்க தமிழ் மக்களே: ஒவ்வொரு அமெரிக்க கிராமத்திலும் ஒரு guitar, வார்த்தைக்கு வராத சோகத்தில் ஒரு ராகத்தை வாசித்து கொண்டுதான் இருக்கிறது" என்று சொல்லலாம்.

 நண்பர் வீட்டை அடைந்தோம். வீடு corn-field (சோளகாடு)  பக்கத்தில் இருந்தது. நான் அவரின் அடுக்களைக்குள்  ஏதோ எடுக்க சென்ற போது, அங்கு fridge   பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் எலிபொறி பார்த்தேன். சோளம் விளை நிலத்துக்கு  அடுத்து இருப்பதால் சில சமயம் field rats - சுண்டெலிகள்  வந்து விடுவதாக சொன்னார். எலி பொறிக்குள் எட்டி பார்த்தேன். உள்ளே ஒரு நல்ல cheese துண்டு இருந்தது. எலிக்கு  என்றார்.

சுண்டெலி சுண்டெலிதான். அது அமெரிக்காவில் இருந்தால் என்ன? இந்தியாவில் இருந்தால் என்ன?  Fancy Farms ஊராக இருந்தால் என்ன? பரிசல்பட்டியாய் இருந்தால் என்ன?  New York க்காக  இருந்தால் என்ன?  சென்னையாய்  இருந்தால் என்ன?  பிரச்சனைதான் - சுண்டெலி;  பிடிக்கும் வழிதான்  - எலிபொறி. ஒரே முடிவுதான் - எலியின் சாவு. ஆனால் bait இல்தான் விவகாரமே இருக்கிறது. இந்த சுண்டெலிக்கு சாகும் முன் நல்ல துண்டு  cheese காத்திருக்கிறது. உலகத்தின் மறுபக்கம் இன்னொரு சுண்டெலிக்கு பொறிக்குள் ஒரு அழுகின தேங்காயோ ஒரு ஊசிப் போன வடையோ காத்திருக்கிறது. அந்த எலி பொறியிலிருந்து தப்பினால் கூட அந்த ஊசி போன வடையை தின்றதினால்  நோவு  வந்து செத்திரும்.

உயிரின் மதிப்பும் மரணத்தின் வலியும் ஒன்றுதான்.  ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளுக்கு பதில்கள், மனித அறிவுக்கு எட்டும் வரைதான் புத்தி விரிவு அடைய வழி வகுக்கும். அதற்கு  மேலயும் சில விஷயங்கள் இருக்கு.  அதை பார்த்து, யோசித்து யோசித்து மண்டையை சொறிஞ்சு காயப் படுத்திகிறதை விட, "அடங்கேப்பா........" என்று ஏற்றுக் கொண்டால் தான் முடியும்.

மூன்று நாட்கள் கழித்து Shopping mall சென்ற போது "Pet shop" பக்கம் எட்டி பார்த்தேன்.  தரம் மற்றும் விலை உயர்ந்த நாய்கள், மீன்கள், கிளிகள் மத்தியில் ஒரு சின்ன கூண்டில் ஒரு சுண்டெலி சந்தோஷமாக ஒரு குட்டி சக்கரத்தின் மீது ஏறி விளையாடி  கொண்டிருந்தது. ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரும் ஒரு சின்ன தட்டில் கொஞ்சம் தானியமும் இருந்தது. கூண்டின் மேல ஒரு அட்டையில், "On sale! $35" என்று மாட்டி  இருந்தது.
அந்த சுண்டெலியை 35  டாலர் கொடுத்து வாங்கி செல்லமாக வளர்க்க  போகும் ஆளை பாக்க சந்திக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை.

இந்த சுண்டெலிக்கு மட்டும் வந்த வாழ்வை பாரு..........மனித வாழ்க்கையிலும் சில சமயம் இதுதான் நடக்கிறதோ?

Thursday, December 3, 2009

கடவுள நம்புறேன்னு சொல்வாங்க ஆனா நம்ப மாட்டாங்க

உங்கள் சிந்தனைக்கு:

என் தோழி ஒருத்தி, கோவிலில் இருந்து 1/2 மணி நேரம் ஜெபம் செய்து விட்டு வந்தாள். அவள் முகம் வாடி இருப்பதை கண்டு, என்ன ஆச்சு என்றேன். ஒரு மணி நேரத்திற்கு, தன் கவலைகளை பற்றி என்னிடம் புலம்பி விட்டு, அதான் கோவிலுக்கு வந்து, சாமி கிட்ட என் ப்ரிச்சனைகளை சொல்லிட்டு வரேன். இப்போ வீட்டுக்கு போறேன். ஒரே பயமாகவும் கவலையாகவும் இருக்கு என்றாள்.


ஆமாம்,  சாமியை நம்பினால், அவர் பாத்துப்பார் என்று நம்ப வேண்டாமா? அந்த நம்பிக்கை, ஒரு அமைதியை தர வேண்டாமா? இது எப்படி இருக்கு தெரியுமா? அழுக்கா இருக்கேன் என்று போய் சுத்தமா குளிச்சிட்டு வந்து, மீண்டும் சேத்துகுள்ளே புரண்டு அழுக்கு ஆகிவிடுவது போல.


ஒரு முறை, நான் மற்றுமொரு தோழி வீட்டில், அவள் தயாராகி வருவதற்காக காத்திருந்த வேளையில், அவளது மாமியார் பக்கத்து பூஜை அறையில் இருந்து சுலோகம் சொல்லி கொண்டிருந்ததது கேட்டது. ஆவலுடன் எட்டி பாத்தேன். அவர் என் பக்கமா திரும்பி, ஒரு சுலோகம் சொல்லி கொண்டே, என்ன என்று கேட்டார். நான் திரும்பி செல்ல எத்தனிக்கையில், "சித்ராவா, இன்னும் மருமக ரெடி ஆகலையா? நான் அப்பவே சொன்னேன். இங்க அங்கேனு காலை தேச்சுக்கிட்டே இருந்தாள். இப்ப பாரு, நாழி ஆயிட்டு." என்று ஒரு போடு போட்டார். நான் "பரவா இல்லை" என்று சொல்லி விட்டு ஹாலுக்குள் வந்தேன். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

kitchenil fridge கதவு மூடி திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளிருந்த என் தோழியின் மாமியார், "சித்ரா, என்னன்னு பாரு. வேலைக்காரிக்கு நான் எல்லாம் எடுத்து வச்சுட்டு தான் வந்தேன். இன்னும் எதுக்கு fridge உக்குள் குடையிரா? போய் என்னன்னு கேளு." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

ரெண்டு நிமிஷம் கூட ஆகியிருக்காது. "சித்ரா, வெளியிலே சைக்கிள் பெல் சத்தம் கேக்குது. பூ விக்குற ரவியானு பாரு. அவன் எனக்கு ஐஞ்சு ரூபா மீதி தரணும்" என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

நான் எழும்பி செல்லும்போது, விக்கல் எனக்கு வந்து விட, அவர், " உன்னை யாரோ நினைக்கிறா. கொஞ்சம் சீனி அள்ளி வாயில் போட்டுக்கோ. டேபிள் மேல இருக்கிற பெரிய டப்பாவில் இருந்து இல்லை. பக்கத்தில் ஒரு சின்ன கிண்ணத்தில் சீனி இருக்கும்." என்றார். மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

அடுத்த ரெண்டு நிமிஷத்தில், "சித்ரா, அந்த gas stove ஐ வேலைக்காரியிடம் அணைக்க சொன்னேன். அணைச்சிட்டாலா என்று பார்." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா,  மருமக இவ்வளவு நேரமா குளிக்கிராளா? போகும் போது geyser off பண்ணிட்டாளானு செக் பண்ணிக்க சொல்லிக்கோ."  மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, திரும்பி வரும்போது, நம்ம ஐயர் கடை திறந்து இருந்தா, coffee பொடி மறக்காமா வாங்கி வர மருமகளுக்கு ஞாபக படுத்திக்கோ." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, வேலைக்காரி ஏதோ பாத்திரத்தை கீழே போட்ட சத்தம் கேக்குது. என்னன்னு பாரு." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, உனக்கு ஜூஸ் வேணுமினா, fridge இல் இருக்கு. எடுத்துக்க." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, பூஜை பண்றதால உன்னை கவனிக்க முடியலை. உபசரிக்க முடியலை." மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

"சித்ரா, நோக்கு சாமி பக்தி எல்லாம் உண்டா? இல்ல, அது எல்லாம் வேண்டாம்னு இருக்கியா?" மீண்டும் அவர் பூஜையை தொடர்ந்தார்.

உள்ளிருந்து வந்த என் தோழி, " சாரி, சித்ரா. ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேனா? எங்க மாமியார் பூஜையில் இருக்காங்க. இல்லனா அவங்களாவது உனக்கு பேச்சு துணைக்கு இருந்திருப்பாங்க. வா போகலாம்."

"ஆண்டவா, எனக்கே இந்த நிலமைனா, என் தோழியை காப்பாத்து." கடவுளை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தன் முன்னால் கடவுள் உண்டு என்று ஆத்மார்த்தமாக நம்பியிருந்தால், அவரை மனப்பூர்வமாக ஆராதித்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் கொடாமல் பூஜித்து இருப்பார். இன்று அவள் மாமியார் செய்த பூஜைக்கு பலன் தான் என்ன? அது அந்த கடவுளுக்கும் அவருக்கும் உள்ள பிரச்சனை.

"கடவுள் இல்லை" என்பவர், அதை உறுதியாய் நம்பி, "தன் கையே தனக்கு உதவி" என்று இருப்பார்கள்.
"கடவுள் இல்லாமல் நான் இல்லை" என்பவர், அதை உறுதியாக நம்பி, "எல்லாம் கடவுள் கையில்; எல்லாம் அவன் செயல்" என்று  இருப்பார்கள்.


"கடவுள் இருக்கிறார்" , ஆனால் எங்கே என்றுதான் தெரியவில்லை என்று, "கடவுள் என்னை ரொம்பவும் சோதிக்கிறார். என்ன செய்ய போறேன்னு தெரியலை" என்று இருப்பவர்கள் பாவம். இவர்களுக்கு, தன்னம்பிக்கையும் இல்லை; தெய்வ நம்பிக்கையும் இல்லை. "இறைவா, இவர்களை காப்பாற்று."